சென்னை: தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு மக்கள் வெள்ளம் அலைமோதியது. இதையடுத்து, அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் வேலை, வியாபாரம் மற்றும் படிப்பு என வசிக்கின்றவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடுவதற்காக செல்கின்றனர். இதன் காரணமாக பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் நேற்று முதல் அலைமோதி வருகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி சமூகவிரோதிகள் வழிப்பறி, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நேற்று காலை பேருந்து நிலையத்தில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையம் முழுவதும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இன்று (நேற்று) முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இதனை பயன்படுத்தி வழிப்பறி, செல்போன் பறிப்பு திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்தில் சிரமமின்றி செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். பயணிகள் கவனமாக இருப்பதற்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறோம். பேருந்து நிலையத்தில் சந்தேகப்படியான நபர்கள் சுற்றி வந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்றனர்.