சென்னை: தீபாவளி பண்டிகையின்போது இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணித்தனர் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பவும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. போக்குவரத்து துறை சார்பில் கடந்த நவ.9, 10, 11 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10,595 சிறப்பு பேருந்துகளும், அதேபோல நவ. 12, 13, 14 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 6,992 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அரசு பேருந்துகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டொர் பயணம் செய்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கூடுதலாகவே பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு சென்னையில் இருந்து பயணிக்க 68,000 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 1.20 லட்சம் பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு 2.43 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இதன் மூலம் ரூ.12 கோடி வருவாய் கிடைத்தது. மேலும் கடந்த நவ.9ம் தேதி முதல் 14ம் தேதி வரை மொத்தமாக 30,000த்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கபட்டது. இந்த பேருந்துகளில் 8 லட்சம் பேர் பயணம் செய்தனர்.