சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தங்கம் விலை அதிரடியாக இன்று குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுவதும், குறைவதுமாக கண்ணாமூச்சி விளையாடி வருகிறது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்த நிலையில், நேற்று திடீரென தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160க்கு விற்பனை ஆனது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று திடீரென கடும் சரிவை கண்டது. அதாவது சவரன் ரூ.360 குறைந்து ரூ. 44,800க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.76க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவு தீபாவளி பண்டிகைக்காக நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நகை கடைகளில் விற்பனையும் அதிகரித்ததாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு 1,500 கிலோ அளவுக்கு தமிழகம் முழுவதும் நகைகள் விற்பனையாக வாய்ப்பு இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.