டெல்லி : வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசாக வட்டி தொகையை வரவு வைக்கும் பணியை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2020-2021ம் ஆண்டில் 8.5% ஆக இருந்த நிலையில், 2021-2022ம் ஆண்டில் 8.1% ஆக குறைக்கப்பட்டது. இது 40 ஆண்டுகளுக்கு பிறகு மிக குறைவான வட்டி விகிதம் என்பதால் சந்தாதாரர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர். இந்த நிலையில் 2022-2023ம் நிதியாண்டில் வட்டி விகிதம் சற்று உயர்த்தப்பட்டு 8.15% வழங்குவதாக கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் வட்டி தொகை எப்போது சந்தாதாரர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்து ஒன்றிய அரசு அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், தீபாவளி பரிசாக பி.எப். சந்தாதாரர்களுக்கு வட்டி தொகையை வரவு வைக்கும் பணியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடங்கி உள்ளது. விரைவில் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வட்டி தொகை வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிஎப் பயனாளர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வருங்கால வைப்பு நிதி அமைப்பு உரிய நேரத்தில் வட்டி வழங்கியதில்லை. நவம்பர் மாதம் தொடங்கியும் வட்டி வழங்கப்படவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த வருங்கால வைப்பு நிதி அமைப்பு, “பிஎப் வட்டியை வழங்க தொடங்கிவிட்டோம். விரைவிலேயே வாடிக்கையாளர்களின் கணக்கில் அது வரவாகும். வட்டி விடுபடாது. யாருக்கும் எந்த இழப்பும் இருக்காது. பொறுமையுடன் இருங்கள்” என்று தெரிவித்துள்ளது.