‘பாற்கடல் கடையப்பட்டபோது வெளியானவர் தன்வந்திரி’ என்கிறது பாகவதம். தீபாவளிக்கு முந்தைய திரயோதசி தினம்தான் இவரது அவதார தினமாக இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயங்களில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும்.
பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன்பின், அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் (கரண்டி) தேவர்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே, தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்கி இல்லத்தில் சேர்ப்பது வட இந்தியர்களின் வழக்கம்.
தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல், தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனப்பூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும்.
ஆயுர்வேத வைத்திய முறையில் ஆராய்ந்து பல சிகிச்சை முறைகளை நமக்கு அருளியவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். தன்வந்திரி பகவானுக்கென்று பிரத்தியேக ஆலயம் வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப் பேட்டையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வேலூர், பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில் இருக்கிறது வாலாஜாபேட்டை.
இங்கிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் ‘ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆரோக்ய பீடத்தை அடையலாம். இங்கு பிரதிஷ்டை ஆகி இருக்கும் ஸ்ரீதன்வந்திரி பகவான், சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது.
சற்றுக் கீழே ஸ்ரீகஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப் பூச்சி.
வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும், கைக் கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்பில் பெல்ட்டுமாக, தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார் இந்த தன்வந்திரி பகவான். தீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, ‘டாக்டர் தன்வந்திரி’ என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார்!
தொகுப்பு: நாகலட்சுமி