டெல்லி: தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாடு முழுக்க நேற்று தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம் காரணமாக இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் வழக்கம் உள்ளது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏராளமான பட்டாசுகள் வெடித்தன. தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை, பல பகுதிகளில் காலை முதலே பட்டாசு வெடித்தது, மாலை நெருங்க நெருங்க பெரிய அளவில் பட்டாசு வெடித்தது.
இதன் காரணமாக, மாசுவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனிடையே, தீபாவளியன்று டெல்லி தீயணைப்புத் துறைக்கு 208 அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து தொடர்பாக 166 அழைப்புகளும், பட்டாசு வெடி விபத்து குறித்து 22 அழைப்புகளும், விலங்குகள் மீட்பு தொடர்பாக 16 அழைப்புகளும் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சாலை விபத்து தொடர்பாக 5 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சதர் பஜார், கைலாஷ் கிழக்கு மற்றும் திலக் நகர் ஆகிய இடங்களில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டன, இருப்பினும் தீ விபத்தால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத்துறைக்கு கடந்த 2015ல் 290 அழைப்புகள், 2016ல் 243, 2017ல் 204, 2018ல் 271, 2019ல் 245, 2020ல் 205, 2021ல் 152, 2022ல் 201 அழைப்புகள் வந்துள்ளது. 2019ம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்ச அழைப்புகள் இந்தாண்டு வந்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் எந்த அவசரச் சூழலையும் சமாளிக்க டெல்லி தீயணைப்புத் துறை தயாராக உள்ளது. 2,500 தீயணைப்புப் பணியாளர்களுடன் 200 வாகனங்கள் நகரின் 25 பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நிறுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.