டெல்லி: பட்டாசு வெடிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வேதி பொருட்களை கொண்டு போலியான பசுமைப் பட்டாசுகளை தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமைகளை ரத்து செய்யக்கோரி அர்ஜுன் கோபால் என்பவர் இடைக்கால மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இதில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பேரியம், சரவெடிகளை கொண்டு பசுமை பட்டாசு உற்பத்தியை விரைந்து ஒப்புதல் வழங்ககோரியும், தமிழ்நாடு பட்டாசு கேப் உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.மூப்பன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த செப்டம்பர் 22ம் தேதி விசாரித்தது. அப்போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டல் ஜெனரல் ஐஸ்வர்யா, டெல்லியில் சட்டவிரோத பட்டாசு விற்பனை கண்காணிக்கபடுகிறது. சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பவர்கள், வெடிப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
அப்போது, பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தீர்வாகாது என்றும் சட்டவிரோத பட்டாசுக்கான காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெடிப்பதற்கான கால அளவை மாநில அரசு தடை விதிக்கும் பட்சத்தில் அதை முழுமையான தடையாக கொள்ள வேண்டும் என்றும் எவ்வித தற்காலிக உரிமத்தையும் டெல்லி காவல்துறை வழங்கக்கூடாது என தெரிவித்தனர். இதனிடையே, பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்யவும், அதனை வெடிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து, அதற்கான கால நேர கட்டுப்பாட்டை விதித்திருந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், ராஜஸ்தான் மாநிலத்திலும் காற்று மாசு அதிகரித்து வருவதால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் ராஜஸ்தான் மாநிலத்திற்கும் பொருந்தும் என்பதாக தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது தீபாவளி நேரம் மட்டும் அல்ல தேர்தலும் நடக்கிறது. காற்று மாசுவை தடுப்பது என்பது நீதிமன்றத்தின் கடமை மட்டும் அல்ல மாறாக அனைவரின் கடமை ஆகும். மேலும் இந்த விவகாரத்தில் பொதுவான உத்தரவை மட்டுமே நாங்கள் பிறப்பிக்க முடியும். எப்படி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை அறிவுறுத்த முடியாது.
தற்போதைய காலகட்டத்தில் மூத்தவர்களை விட பள்ளி குழந்தைகளே அதிக பட்டாசுகளை வெடிக்கின்றனர். பட்டாசு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். காற்று, ஒலி மாசுவை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி என உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.