நெல்லை: தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 9ம்தேதி சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் அதிநவீன ரயில்களை இயக்கும் எண்ணத்தில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை – கோவை மற்றும் சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் வாரத்தில் செவ்வாய்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நெல்லை – சென்னை இடையே இரு மார்க்கத்திலும் ஒரு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி வரும் 9ம்தேதியன்று வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சென்னையில் புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில், மதியம் 2 மணிக்கு நெல்லை வந்து சேருகிறது. தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, சென்னைக்கு இரவு 11 மணிக்கு போய் சேருகிறது. இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.