சென்னை: தீபாவளி கொண்டாட்டத்தின் போது சென்னையில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு காற்று மாசு குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகரத்தின் காற்றின் தரம் மற்றும் ஒலி அளவு ஆய்வு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய உச்சநீதிமன்றம், ஆணையின் படி ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள்/ மாசு கட்டுப்பாடு குழுமங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக அதாவது 15 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2023) தீபாவளி பண்டிகை அன்று காலை 06.00 முதல் 07.00 மணி வரையிலும், இரவு 07.00 முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவையும் கண்டறிய பெருநகர சென்னை மாநகரத்தில் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சௌக்கார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 15 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும், தீபாவளி அன்றும், தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது.
மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் நவம்பர் 06 (மாலை 6 மணிமுதல் இரவு 12 மணி வரை) மற்றும் தீபாவளி பண்டிகையன்று நவம்பர் 12 (மாலை 6 மணிமுதல் இரவு 12 மணி வரை) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருநகர சென்னை மாநகரத்தின் கடந்த 3 ஆண்டுகளின் காற்றின் தரம் மற்றும் ஒலி அளவு ஆய்வு பற்றிய அறிக்கை அட்டவணை 1 மற்றும் 2-ல் இணைக்கப்பட்டுள்ளது.
அட்டவணை 1 : சுற்றுப்புற காற்றுத்தர ஆய்வறிக்கை மற்றும் காற்றுத்தர குறியீடு
அட்டவணை 2: ஒலி மாசுபாட்டு அளவின் ஆய்வறிக்கை
தீபாவளி பண்டிகைக்கு முன் அதாவது நவம்பர் 06 அன்று (மாலை 6 மணிமுதல் இரவு 12 மணி வரை) குறைந்த அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 52.3 dB(A)ம், அதிக அளவாக ஒலி மாசு நுங்கம்பாக்கத்தில் 64.7 dB(A)ம் ஆக கண்டறியப்பட்டது. மேலும் தீபாவளி அன்று (அதாவது 12.11.2023) குறைந்த அளவாக ஒலி மாசு தியாகராயநகரில் 60.5 dB(A)ம், அதிகபட்ச அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 83.6 dB(A)ம் கண்டறியப்பட்டது.
ஆகையால் தீபாவளி அன்று கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள், வரையறுக்கப்பட்ட தேசிய சுற்றுப்புற ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிக அளவாக உள்ளது என கண்டறியப்பட்டது. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A) அளவு நிர்ணயிக்கப்பட்டது). தீபாவளி நாளான நவம்பர் 12 அன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு (AQI) காலை 6.00 மணி முதல் மறுநாள் 13.11.2023 காலை 6.00 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 207லிருந்து 365 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (207 AQI) அதிக அளவாக வளசரவாக்கத்திலும் (365 AQI) கண்டறியப்பட்டது.
இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் பெறுமளவில் பட்டாசுகள் மற்றும் வாண வெடிகளை வெடித்ததினாலும், மேலும் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் ஆகும். மேற்கூறிய வானிலை காரணிகளும், பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை அமையவில்லை.
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாவட்ட ஆட்சியாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், செய்தி மற்றும் ஊடகங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தீபாவளி (2022) காற்று தர மாசின் அளவை விட நடப்பாண்டு தீபாவளி (2023) காற்றின் தர மாசின் அளவு 40 விழுக்காடுகள் (AQI) குறைந்துள்ளது என்பது மேற்கண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.