காரைக்கால் : தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க காரைக்காலில் குவிந்து வருகின்றனர்.
நகரின் முக்கிய கடைவீதிகளான திருநள்ளார் சாலை, பாரதியார் வீதி கடைவீதிகளில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை இனிப்பு வகைகள் வெடிகள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு மாலை நேரத்தில் குவிந்து வருகின்றனர்.பொதுமக்கள் அதிகளவு வருகையால் போக்குவரத்தும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர். இதனால் காரைக்கால் முழுவதும் களை கட்டியுள்ளது. பொதுமக்கள் அதிகளவு வருகையால் எஸ்.பி.சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆய்வாளர் கிறிஸ்டின் பால், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் கடைவீதிகளில் சட்டம் ஒழுங்கு போலீசார் போக்குவரத்து போலீசார் மற்றும் பெண் போலீசார் உட்பட 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழையால் போலீசார் நனைந்தபடியே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீசார் திடீர் மழை வந்தவுடன் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்கி நின்றவரே பணி செய்து மிகவும் சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.மேலும் காத்தப்பள்ளி சிக்னலில் உள்ள போலீசார் நிழற்குடை மிகவும் சேதம் அடைந்து இருப்பதால் போலீஸார் அந்த சிறு வகையான நிழற்குடையில் நின்றவாறு மழையில் நனைந்தபடி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி வருகின்றனர்.
மழை மற்றும் பேரிடர் காலங்களில் பணிபுரிய காவல் துறைக்கு மேம்படுத்தப்பட்ட ரெயின் கோட் தரப்படும்.ஆனால் சமீப காலங்களாக துறை மூலம் தரபடவில்லை என கூறப்படுகிறது.
எனவே, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரெயின் கோட் வழங்க வேண்டும். சிக்னல் நிழற்குடைய சீரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.