நெல்லை: தீபாவளி பண்டிகை முடிந்து நகரங்களுக்கு செல்ல விரும்புவோர் தென்மாவட்ட பஸ்களில் கடந்த 2 தினங்களாக முன்பதிவு செய்து வருகின்றனர். தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு, திருச்சி, கொச்சி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்வோருக்கு முன்பதிவுகள் இரு தினங்களாக நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை 12ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், 13ம் தேதி திங்கட்கிழமை பலரும் நகரங்களை நோக்கி படையெடுப்பர். அன்றைய தினம் செல்வதற்காக நேற்று பலரும் வரிசையில் நின்று பஸ் நிலையங்களில் முன்பதிவுகளை மேற்கொண்டனர். இதில் சென்னை செல்வதற்காக அனைத்து பஸ்களிலும் இடங்கள் ஹவுஸ்புல்லானது. சேலம், கோவை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் பஸ்களுக்கான முன்பதிவுகள் 70 சதவீதம் நிரம்பியது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, கோவை செல்லும் ரயில்களில் நவம்பர் 12 மற்றும் 13ம் தேதி டிக்கெட் முன்பதிவுகள் நிரம்பி வழியும் நிலையில், தற்போது பஸ்களிலும் முன்பதிவுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இடம் கிடைக்காதவர்கள் சிறப்பு பஸ்கள் இயக்கத்தை நம்பி காத்திருக்கின்றனர்.