மும்பை: தீபாவளி பண்டிகைக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளி வாரத்திற்கான விமான கட்டணம் சில வழித்தடங்களில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. விமானத்தில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க விரும்பும் மக்கள் பொதுவாக பண்டிகைக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே விமான பயணசீட்டினை குறைந்த விலைக்கு முன்பதிவு செய்வது வழக்கம் .
ஆனால் இந்த தீபாவளிக்கு அதனை சாத்தியமற்றதாக மாற்றிவிட்டன விமான நிறுவனங்கள் தீபாவளி பண்டிகை வார நாட்களில் அதாவது அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை முக்கிய உள்நாட்டு வழித்தடங்களில் ஒருவழி பயண கட்டணம் ஏற்கனவே ரூ.20 ஆயிரத்திற்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பை-பாட்னா பயணத்திற்கு ரூ.20,100, பெங்களூரு-வாரணாசி இடையேயான கட்டணம் ரூ.23,650, பெங்களூரு-பாட்னா இடையேயான விமானகட்டணம் ரூ.30,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி வாரத்தில் மும்பையில் இருந்து லக்னோவிற்கும், புனேவிலிருந்து லக்னோவுக்கும் பறக்க ரூ.19,300 கட்டணம் செலுத்த வேண்டும். டெல்லி – கவுகாத்தி இடையேயான தீபாவளி நாள் பயணத்திற்கான கட்டணம் ரூ.18,600 ஆகும். இதே போல பல்வேறு இடங்களுக்கான விமான கட்டணங்கள் 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ன.
அதிகரித்து வரும் தேவை காரணமாக தீபாவளி உட்பட பண்டிகை நாட்களில் விமான கட்டணம் சராசரியாக ஆண்டுக்கு 25 சதவீதம் வரை உயர்த்தப்படுவது வாடிக்கை. ஆனால் இந்த ஆண்டு கட்டண உயர்வு விகிதம் சில வழித்தடங்களில் மிக அதிகமாக இருக்கிறது. எனவே பயணிகள் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தாலும் இந்த ஆண்டு தீபாவளி வாரத்தில் அவர்களது விமான பயணம் மிகவும் விலை உயர்ந்ததாகவே இருக்கும்.