* சுவாசிக்கவே சிரமத்தை ஏற்படுத்தும்
*மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வானத்தில் வர்ணஜாலம் காட்டிய வாண வெடிகளால் சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக மிக மோசமான நிலைக்கு சென்றது. நாடு முழுக்க நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் திரும்பிய திசை எல்லாம் வானத்தில் வித விதமான பட்டாசுகள் வர்ண ஜாலங்களை காட்டியது.எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாகவே காட்சியளித்தது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரிக்கும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவுபடி பட்டாசு வெடிப்பதற்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து ஒரே நேரத்தில் மொத்தமாக பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகள் பனி படர்ந்தது போன்று புகை மண்டலமாகவே காட்சியளித்தது.
இதே நிலை தான் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக காணப்பட்டது. பட்டாசு வெடிப்பால் சென்னையில் 3வது நாளாக தொடர்ந்து காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் குறைந்ததன் காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காற்றின் தரக்குறியீடு 200 முதல் 300 வரை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 322 என்ற தரக் குறியீட்டை தாண்டி மிக மோசமான அளவில் காற்று மாசு இருந்தது. வேளச்சேரி 308, அரும்பாக்கத்தில் 256, ஆலந்தூர் 256, ராயபுரம் 232, கொடுங்கையூரில் 126 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி 241, வேலூரில் 230, கடலூரில் 213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது. காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காற்றின் தரக்குறியீடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மணலி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஓ 2, எஸ் 2 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* கடந்த ஆண்டை விட காற்று மாசு குறைவு
தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து மாவட்ட ஆட்சியாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், செய்தி மற்றும் ஊடகங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் சென்ற ஆண்டு தீபாவளி (2022) காற்று தர மாசின் அளவை விட நடப்பாண்டு தீபாவளி (2023) காற்றின் தர மாசின் அளவு 40 விழுக்காடுகள் (AQI) குறைந்துள்ளது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
* அதிக காற்று மாசு உலகில் டெல்லி நம்பர் 1
உலகில் அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியில் டெல்லி முதலிடம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலின் முதல் 10 இடத்தில் கொல்கத்தா, மும்பை நகரங்களும் இடம் பெற்றுள்ளன. டெல்லியில் தீபாவளியின்போது அதிக அளவு பட்டாசுகள் வெடித்ததால் காற்றில் மாசு துகள்கள் 900 புள்ளிகளை தாண்டியது.
* என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்
51-100: இதுவும் திருப்திகரமான காற்றின் தர வரம்பாகும். ஆனால் இது சுவாச பிரச்னை கொண்ட மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். 101-200: மிதமான காற்றின் தரத்தை இது காட்டுகிறது. காற்று அதிக தரத்தில் இல்லை. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஏற்கனவே நுரையீரல் கோளாறுகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். 201-300: காற்றின் தரம் மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது . நீண்ட காலத்திற்கு வெளிப்படும் போது மக்கள் மீது இதை சுவாசிக்கும் போது ஆரோக்கிய பாதிப்புகளை இது ஏற்படுத்தும். ஏற்கனவே இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம். 301-400: இந்த வரம்பு மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் காட்டுகிறது. இதில் நீண்ட காலம் சுவாசிக்கும் பட்சத்தில் அது சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. சென்னையில் தற்போது காற்றின் தரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.