Sunday, May 26, 2024
Home » பிரிந்த தம்பதியர் ஒன்றுகூட மணிகண்டீசர்

பிரிந்த தம்பதியர் ஒன்றுகூட மணிகண்டீசர்

by Lavanya

உலகில் பக்திக்குக் கட்டுண்ட பரமன், தனது சிறந்த அடியார்களை பலவாறு சோதித்த பின்னர், அப்பக்தனை வெளிக்காட்டுவதில் வல்லவர். இந்த பூவுலகில் சிவபெருமான் ஆற்றிய எண்ணற்ற திருவிளையாடல்களில், பெண்ணையே ஆணாக மாற்றிய பெருமை கொண்டது இந்த மேல் சீஷமங்கலத்தில்தான். ஆதியில் தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வாசுகி நாகம் கக்கிய ஆலகால விஷத்தின் வீரியம் தாங்காமல், பரிதவித்தனர் அமரர்கள். விஷயத்தை பிரம்மனிடம் தெரிவித்து, விமோசனம் கேட்டனர். அதற்கு பிரம்மா… கயிலாயத்தைவிடவும் சிவபரம்பொருள் மிகவும் விரும்பும் பூவுலகத் தலமான “ஸ்ரீ வேதபுரி’’ என்னும் திருவத்திபுரத்தில் வழிபடும்படி தேவர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படியே பூவுலகம் அடைந்த முப்பத்து முக்கோடி தேவர்களும், ஈசன் மகிழ்ந்து வீற்றருளும் தலமான ஸ்ரீ வேதபுரி (செய்யார்) தலத்தை அடைந்து, நியமத்துடன் ஈஸ்வரரைப் பூஜித்தனர். மகிழ்ந்த மகேசர், தேவர்களுக்கு காட்சி தந்து, இத்தலத்திற்கு கீழ்த்திசையில் ஒரு குரோச தூரத்தில் [இப்போது உள்ள மேல் சீஷமங்கலத்தில்] கமண்டல நாகநதிக்கு தென்பால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட வேணுமாய் திருவருள் புரிந்தார். அப்படியே செய்த தேவர்களுக்கு, இத்தலத்தினில் எழுந்தருளிய எம்ெபருமான் அருளை வழங்கி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை தனது கண்டத்தில் (தொண்டையில்) அடக்கி, அமரர்களோடு, அகிலத்தையும் காத்தருளினார். இதனால் இத்தல ஈசர்ஸ்ரீ மணிகண்டீசர் எனப் போற்றலானார். இதன் காரணமாக, பிரதோஷ காலத்தில் இங்கு வந்து ஈசனை வழிபடுவது மிகுந்த புண்ணியத்தையும், பிறப்பில்லா தன்மையையும் தரும் என்கிறது தல புராணம். இந்த புராண வரலாறு, செய்யாறு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலய புராணத்தோடு தொடர்புடையது. இத்தலம் குறித்து ஆறு பாடல்கள் திருவத்திபுரம் புராண வரலாற்றில் இடம் பெற்றிருப்பது சான்றாக உள்ளது. முன்னொரு சமயம், இத்தல ஈசனை ஓர் ஆதிசைவர் [சிவாச்சாரியார்] அனுதினமும் ஆகம விதி மாறாமல் அபிஷேகித்து, அர்ச்சனை புரிந்துவந்தார்.
ஒரு நாள், திடீரென நோயுற்றுப் படுத்தார். மணிகண்டீசர் மீது அளவற்ற அன்பு கொண்ட அந்த ஆதிசைவர், பெருமானுக்கு நித்திய பூஜை செய்ய முடியாமல் போனதை எண்ணி மிகவும் வருந்தினார். தனது உடல் வலியைவிடவும், ஈசனை பூஜிக்காத மனவலியால் துடித்தார். தனது மனைவி அங்கயற்கண்ணியை அழைத்தார். மணிகண்டீசரை பூஜிக்கும்படி அன்புக் கட்டளையிட்டார்.
தன் கணவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கோயில் கருவறைக்குள் நுழைந்து, கயிலைநாதரை கருணை உள்ளத்தால் பூசனை புரிந்தார். இப்படியே சில நாட்கள் நடந்தது. இதைப் பார்த்த ஊர்மக்கள் அறியாமையால், ஓர் பெண் கருவறைக்குள் சென்று சிவபூஜை செய்வது குற்றமென்று கருதி, அப்பெண்ணை தண்டிக்க திட்டமிட்டனர். இவற்றை அறிந்த அந்த ஆலால சுந்தரேஸ்வரர், அப்பெண்ணின் பக்திக்கும், ஆதிசைவரின் அன்பிற்கும் கட்டுப்பட்டு, நாள்தோறும் அப்பெண்ணை ஆண் வடிவில் (அதாவது அவளது கணவனது (புருஷன் வடிவில்) எல்லோருக்கும் தோற்றமளிக்கச் செய்தார். சில நாட்களில் அந்த ஆதிசைவர் உடல்நிலை சரியாகி மீண்டும் பூஜைகளை செவ்வனே செய்யத்துவங்கினார். பெண்ணை (ஸ்த்ரீ) ஆணாக (புருஷன்) மாற்றி அருளியதால், இப்பெருமான் “ஸ்த்ரீபுருஷலிங்கம்’’ எனப் போற்றப்பட்டார். அது முதல் “ஸ்த்ரீபுருஷமங்கலம்’’ என்று அழைக்கப்பட்ட இவ்வூர், தற்போது மேல்சீஷமங்கலம் என்று மருவியுள்ளது. இச்சம்பவத்தின் மூலம் இரண்டு உண்மைகள் நன்கு உணர்த்தப் படுகின்றது.
1. ஆதிசைவர் மட்டுமே சிவாலயத்தில் சிவபூஜை செய்ய உகந்தவர்.
2. ஆதிசைவர் நோயுறும் காலத்தில் அவரது துணைவியார் பூஜை புரியலாம்.
இவையிரண்டும் ஈசனே அருளிய ஆகமம் சொல்லும் ஆணித்தரமான உண்மைகளாகும்.
ஊரின் தென்புறம் பேருந்து சாலைக்கு சற்று தள்ளி சிவாலயம் அமைதியான சூழலில் அற்புதமாக அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய தோரணவாயிலுடன் நாற்புறமும் மதில்கள் சூழ எழிலுற அமையப் பெற்றுள்ளது ஆலயம். முன்னே தேவர்கள் உண்டாக்கிய தேவ தீர்த்தம் காணப்படுகின்றது. விசாலமான ஒரே பிராகாரத்தைக் கொண்டு விளங்குகின்றது. தென் பிராகார வலத்தைத் தொடங்கி, சற்றே வலப்புறம் திரும்பிட… முன் மண்டபம் வருகிறது. அதையடுத்து மூடுதளமாக மகா மண்டபமும், பின்னர் அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. கருவறையுள் கருணையே வடிவாய் திருவருள் பொழிகின்றார், ஸ்ரீ மணிகண்டீஸ்வரர். அற்புதங்கள் பல நிகழ்த்திய பெருமானை வணங்கி ஆலயவலம் வருகையில், தென்மேற்கில் கணபதி சந்நதி கொண்டுள்ளார். அடுத்தபடியாக, கந்தனும் ஆலயம் கொண்டு அருள்பாலிக்கின்றார். கோஷ்ட மாடங்களில் முறையாக அமைந்துள்ள ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி,ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா மற்றும் ஸ்ரீ துர்க்கையை வணங்குகின்றோம். ஈசனையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நமஸ்கரிக்கின்றோம். பின், வாம பாகத்தில் தனிச் சந்நதி கொண்டு பக்தர்களுக்கு அருள்கிறாள் அன்னை. இந்த சந்நதியும், மூடுதளமாக மகா மண்டபத்துடன் திகழ்கிறது. மூலஸ்தானத்தில் சிரித்த முகத்துடன் நின்றவண்ணம் திருக்காட்சி அருள்கின்றாள், ஸ்ரீ தர்மசம்வர்த்தினி என்னும் அறம்வளர்த்தநாயகி. காஞ்சி மாநகரில் 32 அறங்களைப் புரிந்ததனால், ‘‘அறம்வளர்த்தநாயகி’’ என்று போற்றப்படுகின்றாள் அன்னை பராசக்தி. வடபிராகாரத்தில் பழமையான பெரிய வேப்பமரமும், நாகர் மேடையும் அமைந்துள்ளன. மேற்கில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. சிறிய ஆலயம்தான். ஆனால், சிறப்புற பராமரிக்கப்படுகின்றது. தினமும் ஒரு கால பூஜை நடக்கின்றது. ஊர் பொதுமக்களின் பொறுப்பில் உள்ள இவ்வாலயத்தில், அனைத்து சிவாலய விசேடங்களும் சிறப்புற நடத்தப்படுகின்றன. பிரிந்த தம்பதியர்கள் இங்கு பிரதோஷத்தன்று அபிஷேகப் பொருட்களை வாங்கித்தந்து, அய்யனையும், அம்மையையும் வேண்டிக்கொள்ள, விரைவில் ஒன்றுசேர்ந்துவிடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள இவ்வூர் ஆரணி – வாழைப்பந்தல் பேருந்து சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து வாழைப்பந்தலுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மோ.கணேஷ்

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi