திருமலை: விவாகரத்து ஆகி தனியாக வசிக்கும் ஆண்களுக்கு காதல் வலை வீசி நகை, பணத்தை பறித்து சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரதுர்கா நீலிமா(26). இவர் திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண்கள், குடும்ப பிரச்னை காரணமாக தனியாக வசித்து வரும் ஆண்களாக பார்த்து பழகுவாராம். பின்னர் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போல் அன்பாக பேசி காதல் வலை வீசுவாராம்.
அன்பிற்காக ஏங்கி தவிக்கும் ஆண்களும், வீரதுர்கா நீலிமாவின் பேச்சில் எளிதாக மயங்கி விடுவார்களாம். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு, கழற்றிவிட்டு சென்றுவிடுவாராம். இதற்கு வீரதுர்கா நீலிமாவின் பெற்றோரான ராமகிருஷ்ணா-வீரலட்சுமி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாண் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், வீரதுர்கா நீலிமாவை கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வந்து மீண்டும் இதேபோல் பலரிடம் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவ்வாறு சுமார் 12க்கும் மேற்பட்ட ஆண்களிடம் வீரதுர்கா நீலிமா கைவரிசை காட்டியுள்ளாராம். இந்நிலையில் வீரதுர்கா நீலிமாவில் லீலைகளில் சிக்கி பணத்தை இழந்த நரசாபுரம், பாலகொல்லு மற்றும் கோவ்வூரை சேர்ந்த 3பேர் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணாராவிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வீரதுர்கா நீலிமா, ராமகிருஷ்ணா, வீரலட்சுமி, கல்யாண் ஆகிறோரை தேடி வருகின்றனர்.