* இசை என்பதற்கு என்னபொருள்?
இசை என்பதற்கு ஏற்றுக் கொள்ளல் என்று பொருள். இசைதல் (தலையாட்டுதல்) என்று பொருள். அதனால்தான் பாடும் பொழுது நாம் தலையாட் டுகின்றோம். இசையைக் கேட்டு தலையாட்டுகின்றோம். நாம் மட்டும் தலையை ஆட்டவில்லை. எல்லா உயிர்களும் பயிர்களும் தலையை ஆட்டுவதாக நிரூபித்து இருக்கிறார்கள். நம் பிரார்த்தனைக்கு பகவான் இசைகிறான். அவனை இசைய வைக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் பண்ணில் தேவாரத்தையும் திவ்யபிரபந்தத்தையும் பாடினார்கள். இசை வழி பாடு நடத்தினார்கள். வாழ்வில் இசைதான் பிரதானம். மக்கள் இசையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பதை கோயில் வழிபாட்டிலும் ஏனைய திருவிழா சமயங்களிலும் இசைக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அறியலாம்.
* மூன்று இசைகளில் மொத்த வாழ்க்கை
மனிதனின் மொத்த வாழ்க்கையும் மூன்று இசைகளில் அடங்கி விடுகின்றது. இதனை பட்டினத்தார்,
முதற் சங்கம் அமுதூட்டும் மொய்குழலார்
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போதென ஊதும் அம்மாட்டோ
இம்மட்டோ நாம் வாழ்ந்த பூமி நலம் என்றார்.
குழந்தை பிறந்தவுடன் சங்கு இசைக்கும் பழக்கம் உண்டு. அடுத்து இசை வடிவமான சங்கில் குழந்தைக்கு பாலூட்டுகின்றார்கள். அதற்காக தாய் மாமன் சங்கை பரிசளிக்க வேண்டும் என்கிற மரபு உண்டு. சங்கினால் பால் கொடுத்தால் சந்தன வாய் நோகும் என்று தங்கத்தால் சங்கு செய்தேன் என்ற பாடல் இதன் சிறப்பை உணர்ந்து. திருமணத்தின் போது இரண்டாவது சங்கு, குறிப்பாக நகரத்தார் சமூகங்களில் திருமண மங்கல நாண் பூட்டும் பொழுது சங்கை ஒலிக்கின்றார்கள்.
மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று ஆண்டாள் பாடியிருப்பதால் வைணவத்தில் திருமணத்தில் போது சங்கு இசைக்கும் பழக்கம் உண்டு.
* ஆண்டாள் விரும்பிய சங்கு
ஆண்டாள் தனது திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்று ஒரு பதிகம் பாடி இருக்கிறார்.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
இந்தப் பதிகத்தை தினம் மாலை வேளையில் விளக்கேற்றி பாட விரை வாக திருமணம் நடக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு. அதிலே திருமண இசை மரபைச் சொல்லுகின்றாள் பகவானுடைய ஆயுதங்கள் அதிகம். பெயர்களும் அதிகம். அதில் பிரதானமான சங்கு, சக்கரம், வாள், கதை, வில். என ஆயுதங்கள் ஐந்து. பஞ்சாயுதங்கள் என்று சொல்லுவார்கள் இதில் முதலில் சொல்வது சங்கம் தான். பகவான் சங்கத்தை பாஞ்ச சந்யம் என்பார்கள். ஆண்டாள் நாச்சியார் கண்ணனின் சங்கின் மீது காதல் கொள்கின்றாள். அந்தச் சங்கினைத் தொட வேண்டும் என்று நினைக்கின்றாள். காரணம் அந்த சங்கு தானே இறைவன் இதழோடு இணைந்து அவருடைய வாய் அமுதத்தை பருகும் பாக்கியத்தைப் பெற்றது..
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்தி ருக்கும்மோ,
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே.
கண்ணனின் இதழோடு பொருந்தி அவனுடைய வயமுதம் பருகும் வாய்ப்பு சக்கரத்துக்கு இல்லை. அது ஆனால் சங்குக்கு அந்த அருமை உண்டு.
* வெற்றி தரும் சங்க நாதம்
அது சரி, வாழ்வுக்கு சாதகமாகும் சங்கின் ஒலி, ஒருவரை அழிப்பதற்குக் காரணமாக இருக்குமா என்றால் “சங்கூதி விட்டான்” என்று சொல்லே ஒன்றின் முடிவைக் காட்டுகின்றது. “கடைச்சங்கம் ஆம்போதென ஊதும்”. மனிதனின் வாழ்வில் நிறைவில் ஊதப்படும் சங்கு கடைச்சங்கு. இத்தனை காலம் வாழ்ந்த மனிதன் இதோ விடைபெற்றுச் சென்றுக் கொண்டிருக்கிறான் என்பதை உலகுக்கு அறிவிக்கும் சங்கு கடைச்சங்கம். ஆம் போதென ஊதும் என்பது வாழ்வின் நிலையாமையைச் சொல்லு கின்றது. அதற்குள் நிலைத்த வாழ்க்கையைத் தேட வேண்டும். அதற்கு இறைவனை வணங்க வேண்டும் என்பதைச் சொல்லுகின்றது. மகாபாரத போர்க்களத்தில் இரண்டு படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போரின் தொடக்கமாக சங்கு ஊதப்ப்படுகின்றது. பீஷ்மர் ,துரியோத னன், என பலரும் சங்க நாதம் செய்கின்றனர். கண்ணன் தன்னுடைய பாஞ்சசந்யத்தை எடுத்து ஊத, அதன் பயங்கரமான இருதயத்தை பிளக்கச் செய் யும் ஒலியால் இதயம் சுக்கு நூறாகி, அப்பொழுதே துரியோத னாதியர்கள் பட்டுவிட்டார்கள். இனி தங்களால் பிழைக்க முடி யாது என்கிற அளவுக்கு இதயம் ஒடுங்கிப் போகின்றார்கள் என்று வியாசர் எழுதுகின்றார். அந்த ஸ்லோகம் இது.
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்
நபஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ வ்யநுநாதயந்
பாண்டவர்களுடைய வெற்றியை அறிவிக்கும் அதே சங்கின் ஒலி துரியோதனாதியர்களின் தோல்வியையும் அறிவிக்கின்றது.