அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோரியம்பட்டியை சேர்ந்தவர் சாந்தி. அவரது கணவர் கண்ணன். பாஜ இளைஞரணி மாவட்ட செயலாளராக உள்ளார். அரியலூர் மாவட்ட பாஜ தலைவராக டாக்டர்.பரமேஸ்வரி உள்ளார். கட்சி பேனர்களில் பாஜ மாவட்ட தலைவர் பரமேஸ்வரி படத்தை தவிர, மற்றவர்களின் புகைப்படங்களை போடுவதில்லை. கட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை நிர்வாகிகளுக்கு சரிவர சொல்வதில்லை என்பது போன்ற பல்வேறு விவகாரங்களில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜ இளைஞரணி செயலாளரான கண்ணன், மாவட்ட தலைவர் பரமேஸ்வரியின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜ மாவட்ட தலைவராக உள்ள பரமேஸ்வரிக்கும், கண்ணனுக்கும் முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாந்தி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பாஜ மாவட்ட தலைவர் பரமேஸ்வரியும், அவரது கணவர் ஆனந்தராஜிம் சேர்ந்து எங்களை கொலை செய்து விடுவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே நள்ளிரவில் வீட்டிற்கு அடையாளம் தெரியாத ஆட்களை காரில் அனுப்பி எனது கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். பாஜமாவட்ட தலைவரே, பாஜவைச் சேர்ந்த இளைஞரணி மாவட்ட நிர்வாகி மற்றும் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுவால், அரியலூர் மாவட்ட பாஜவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாஜ மாவட்ட தலைவர் பரமேஸ்வரி சார்பாக பாஜ வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில், இளைஞர்அணி செயலாளர் கண்ணன் மீது புகார் மனு கொடுத்துள்ளனர்.