திருச்செங்கோடு, நவ.11: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், வரும் 15ம் தேதி காலை 11 மணிக்கு, மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியருக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டி ஆகியவை நடக்கிறது. இதில், கலந்து கொள்ள பதிவுக்கட்டணம் ஏதும் இல்லை. பள்ளி -கல்லூரி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரின் கடிதம் இருந்தால் போதும். போட்டிக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பினை, விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளி சீருடை மற்றும் அடையாள அட்டையுடன் வர வேண்டும். பேச்சுப் போட்டிக்கு நான்கு நிமிடங்களும், கட்டுரை போட்டிக்கு முப்பது நிமிடங்களும் வழங்கப்படும்.ஒரு போட்டிக்கு ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து 10 பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
கட்டுரை போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பேப்பர் மற்றும் பேனா வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். அவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். முதல் பரிசாக ₹7500, இரண்டாம் பரிசாக ₹5000, 3ம் பரிசாக ₹3000 ரொக்க பரிசாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். எனவே, மாணவ -மாணவிகள் போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.