மதுரை: வேளாண் வணிகத்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 2.34 கோடி பொதுமக்களுக்கு விவசாயிகள் உற்பத்தி செய்த ரூ.568 கோடி மதிப்பிலான காய், கனிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு: உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்ட ரூ.568.48 கோடி மதிப்பிலான 1.36 லட்சம் மெட்ரிக் டன் காய், கனிகள் 5 லட்சத்து 16 ஆயிரத்து 892 விவசாயிகளால் உழவர் சந்தை மூலம் 2.34 கோடி நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 கிராமங்களில் ரூ.52.5 கோடி மதிப்பில் 5 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 13 கிராமங்களில் ரூ.442 கோடி மதிப்பில் உலர்களங்களுடன் கூடிய தரம் பிரிப்பு கூடங்களும் கட்டப்பட்டுள்ளது. சிறுதானிய இயக்கத்தின் மூலம், 2 சிறுதானிய முதன்மை பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டதில், ரூ.23.5 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் வேளாண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக மதிப்புக்கூட்டுதல் இயந்திரங்கள் வாங்க 21 தொழில் முனைவோர் பயனடையும் வகையில் ரூ.87.5 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில் விரிவாக்க திட்டத்தில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை மேம்படுத்தவும், தொழிலை விரிவாக்கம் செய்திடவும், மாவட்டத்தின் மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.1.5 கோடி லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அக்மார்க் திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 421 குவிண்டால் உணவு பொருட்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரமான உணவு பொருட்களுக்கு அக்மார்க் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக அரிசி 9 லட்சத்து 22 ஆயிரத்து 528 குவிண்டாலும், பருப்பு மாவு 2 லட்சத்து 46 ஆயிரத்து 545 குவிண்டாலும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தேன், நெய், நல்லெண்ணெய், சீயக்காய் தூள், பயறு, நறுமணப்பொருட்கள், கோதுமை மாவு, கட்டி பெருங்காயம், புளி, வறுத்த சுண்டல் போன்ற உணவு பொருட்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
மதுரை விற்பனைக்குழுவின் மூலம் வேளாண் விளைபொருட்கள் மீதான பொருளீட்டுக்கடன் என்ற வகையில், 510 விவசாயிகளுக்கு ரூ.10.38 கோடியும், 28 வியாபாரிகளுக்கு ரூ.65.58 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.,இதேபோல், மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம், 13 ஆயிரத்து 193 மெ.டன் வேளாண் விளைபொருள்கள் ரூ.22.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்து 579 விவசாயிகள் அதிக லாபம் அடைந்துள்ளனர். இத்தகவலை மதுரை மாவட்ட வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.