சென்னை: சென்னையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். மகாவிஷ்ணு என்பவர் 2 அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தினார். சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மோட்டிவேஷ்னல் பேச்சு என்ற பெயரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நடிகர் தாமு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பேசிய பேச்சிற்கே எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பத்மஸ்ரீ மகா விஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் பள்ளியில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கு தற்பொழுது கடுமையாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், மோட்டிவேஷனல் பேச்சு என்ற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அதாவது, பாவ, புண்ணியம், முற்பிறவி போன்றவற்றை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசினார். குருகுலக் கல்வி குறித்து பேசுகிறார், அறிவியலுக்கு புறம்பான பல விஷயங்களை போகிற போக்கில் பேசிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் இப்படி இருக்கான்.. ஒருத்தன் அப்படி இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஒருத்தன் ஹீரோவா இருக்கான் ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான். ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டார்.
இது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் பேச்சா அல்லது ஆன்மீக சொற்பொழிவா? மறு பிறவி பற்றி பேசுறீங்க, கர்மா பற்றி பேசுறீங்க” என்று அந்த ஆசிரியர் கேட்டதும் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று உரத்த குரலில் அவர் கேட்கிறார். ‘இது தப்பு’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார். மறுபிறவி பற்றி ஏன் சொல்கிறீர்கள் என்று அந்த ஆசிரியர் கேட்டதற்கு மறுபிறவி பற்றி யார் சொல்லிக் கொடுப்பார்கள்.. என்று பதில் கூறுகிறார். எதற்கு ஆன்மீக சொற்பொழிவு என்று கேட்டதற்கு ஆன்மீகம் என்றால் என்ன என்று விதண்டாவாதமாக அந்தச் சொற்பொழிவாளர் ஆசிரியரிடம் கேட்கிறார்.
மேலும், ”அரசுப் பள்ளியில் ஆன்மீகம் பேசக் கூடாது என்று யார் சொன்னது? எந்த சட்டம் சொல்கிறது? சிஇஓ-க்கு மேல நீங்க அறிவு பெற்றவரா?” என்று அடித்துப் பேசுகிறார். அத்துடன், “பாவ புண்ணியத்தை பற்றி பேசாமல் எப்படி ஒருவனுக்கு வாழ்வியலைப் பற்றி போதிக்க முடியும்.. பாவ புண்ணியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றால் நிறைய பாவம் செய்வான்.. நீங்க சொல்லிக் கொடுப்பீங்களா பாவ புண்ணியத்தை பற்றி” என்றும் அந்த சொற்பொழிவாளர் திமிராக கூறுகிறார்.
இந்நிலையில் அவர் பேசிய வீடியோ சர்சையான நிலையில் அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு அளித்துள்ளார். அரசு அனுமதி இல்லாமல் இனி எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது. கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.