நெல்லை: மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 2023 – 24ம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் வானரமுட்டி ஆகிய இடங்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 2023 – 24ம் ஆண்டிற்கான இரண்டு ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை வருகிற 5ம் தேதி காலை 10 மணி முதல் தொடங்குகிறது. வரும் 15ம் தேதி வரை https//scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஓசி, பிசி, எம்பிசி வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் 31.07.2023 அன்று 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 31.07.2023 அன்று 35 வயதிற்குட்பட்டவராகவும், கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள், ஆதரவற்றோர் 31.07.2023 அன்று 40 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கலப்பு திருமணத் தம்பதியினர் பொதுப்பிரிவினராக இருந்தால் 31.07.2023 அன்று 32 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 31.07.2023 அன்று 37 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஓசி, பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500ம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நெல்லை மாவட்டம், முனைஞ்சிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வந்தும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.