Saturday, March 2, 2024
Home » மாவட்ட தாமரை தலைவர் பதவி விலகல் கடிதம் கொடுத்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மாவட்ட தாமரை தலைவர் பதவி விலகல் கடிதம் கொடுத்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘மாவட்ட தாமரை தலைவர் பதவி விலகல் கடிதம் கொடுத்ததின் பின்னணி என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட தாமரைக்கட்சி தலைவராக, ‘உத்தமர்’ பெயர் கொண்ட ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கோலோச்சி வந்தார். இவருக்கு, இப்பதவியை வழங்கியவர் மாநில தலைவர் அண்ணாமலை. மாவட்ட அளவில், கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருந்தும், அவர்களை மீறி இவருக்கு மாவட்ட தலைவர் பதவியை வழங்கினார். ஆனால், இவரது செயல்பாடு, அண்ணாமலைக்கு திருப்தி அளிக்கவில்லை.

கட்சியினரை அரவணைத்து செல்லுதல், கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் கோட்டை விட்டுவிட்டார், ‘உத்தமர்’. அதே நேரத்தில், தனக்கென ‘ஐவர் அணி’யை உருவாக்கிக்கொண்டு, தர்பார் காட்டினார். கூடவே மகளிர் அணி பிரபலம் ஒருவரையும் கைக்குள் வைத்துக்கொண்டார். இந்த டீம் ஒன்றுசேர்ந்து, லோக்கல் இலைக்கட்சி எம்எல்ஏ ஒருவருடன் கைகோர்த்து, ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்தனர். மாவட்டத்தில், தாமரைக்கட்சி கொடி பறக்கிறதோ இல்லையோ, இவர்களது கொடி ரொம்பவே சூப்பராக பறந்தது. இந்த தகவல் அனைத்தும் அண்ணாமலை காதுக்கு சென்றுவிட்டது.

இதையடுத்து அவர், செம கடுப்பாகி விட்டார். உத்தமரை அழைத்து, ‘‘நீங்களாக பதவிவிலகல் கடிதம் கொடுத்தால் கவுரவம், நானாக பிடுங்கினால் அசிங்கம்… இதில் எது வசதி…?’’ என கேள்வி கேட்டுள்ளார். மறுகணமே, உத்தமர், பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட்டார். தற்போது, மாவட்டத்தில் உள்ள மூத்த தாமரை கட்சி நிர்வாகிகள் படுகுஷியில் இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து சேலம்காரர் தூக்க முடிவு செய்ததால் அப்செட்டில் இருக்காராமே மாஜி அமைச்சர்’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இதுவரையிலும் ஒரு கூட்டத்தில் கூட மாஜி அமைச்சரான மாவட்ட செயலாளர் ‘மணியானவர்’ கலந்து கொள்ள வில்லை. மணியானவரை நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டால் கூட பேசுவதை தவிர்த்து வருகிறார். மணியானவர் வீட்டிற்கு நேரில் சென்றாலும் நிர்வாகிகளை சந்திக்க மறுத்து வருகிறார். இதனால் உச்சகட்ட டென்ஷனுக்கு ஆளான நிர்வாகிகள், மணியானவர் பற்றி சேலத்துக்காரரின் கவனத்துக்கு அடுக்கடுக்கான புகார்களை கொண்டு சென்றார்களாம்…

இந்த புகார்களின் அடிப்படையில் மணியானவர் மீது சேலத்துக்காரர் கடும் அதிருப்தியில் உள்ளார். தொடர்ந்து, மணியானவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும் குறைய தொடங்கியதால் மணியானவரை பொறுப்பில் இருந்து தூக்கி விட்டு டெல்டா மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரை நியமிக்கும் முடிவை கடைசியில் சேலத்துக்காரர் எடுத்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் தற்போது இந்த டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருவதால் மணியானவர் கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரர் மேல ரத்தத்தின் ரத்தங்கள் கடும் அதிருப்தியில இருக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல இலைகட்சி பல துண்டாக பிரிஞ்சு போய்டுச்சு. இதுல கொஞ்சம் தொண்டர்களோட இருக்குற சேலத்துக்காரரும் அந்த இலைய சீக்கிரமாக காணாம போக வெச்சிடுவாரு போல இருக்குதேன்னு இல கட்சிக்காரங்ககிட்ட பேச்சு போய்கிட்டிருக்குது. சேலத்துக்காரர் முன்னாடி ஜாய்ண்ட் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும் சரி, முதல் மினிஸ்டராக இருந்தபோதும் சரி அவரை எளிதாக சந்திக்க முடிஞ்சதாம். அதுமட்டுமில்லாம, கட்சி பிரச்னையாக இருந்தாலும், எந்த பிரச்னையாக இருந்தாலும் காது கொடுத்து கேட்டு அதை தீர்த்து வைப்பாராம். இதனால அவர்மேல ரத்தத்தின் ரத்தங்கள் ரொம்ப நம்பிக்கையோட இருந்தாங்களாம்.

ஆனா இப்போ ஜென்ரல் செக்ரட்ரியாக ஆன பின்னாடி தொகுதி, கட்சின்னு எந்த பிரச்னைய சொன்னாலும் காது கொடுத்துக்கூட கேட்குறதே இல்லையாம். மாவட்ட அளவில கட்சியோட செயல்பாடுகள சொன்னா கூட கேட்கமறுத்துடறாராம். இதனால பல பிரச்னைகள பேசி புரியவைக்கலாம்னு நம்பிக்கையோட சேலத்துக்காரர சந்திக்க போகிற முக்கிய நிர்வாகிங்க கூட பெருத்த ஏமாற்றத்தோட திரும்புறாங்களாம். அதுக்கு காரணம் சேலத்துக்காரர் குறிப்பிட்ட சில நிர்வாகிங்களோட ஒரு குறுகிய வட்டத்தின் பிடிக்குள்ள சிக்கிட்டிருக்காரு. அவங்க சொல்றத தான் உண்மைன்னு தலையாட்டுறாராம்.

வெளியே என்ன நடக்குதுன்னு விசாரிச்சு தெரிஞ்சுக்கிறதே இல்லையாம். நிர்வாகிங்க ஆர்வத்தோட சந்திக்க போனாலும் சேலத்துக்காரர் சரிவர பேசுறதே இல்லையாம். நிர்வாகிங்ககிட்ட பேசி, நிறை, குறைகள தெரிஞ்சுக்காம இருந்தா கட்சி எப்படி வளர்ச்சி பெறும்னு ஸ்டேட் மொத்தமாவே, நிர்வாகிங்ககிட்ட கடும் அதிருப்தி அதிகரிச்சிருக்குதாம். எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரேன்னு கட்சிக்குள்ளேயே குமுறல் கேட்குதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டம்மி வேட்பாளரை நிறுத்த வேல நடக்குது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘வட மாநில நதி பெயரில் முடியும் மாவட்ட மக்களவை தொகுதியை குறி வைத்து தாமரைக்கட்சி வேலை செய்து வந்தது. இலைக்கட்சி கூட்டணியோடு தமிழகத்தில் குறி வைத்த 9 தொகுதிகளில் இதுவும் ஒன்று. ஆகையால், இங்கு தாமரைக்கட்சியின் தேசிய தலைவர் முதல் மாநில தலைவர் உள்பட பலர் பங்கேற்ற கூட்டம் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. மற்ற தொகுதிகளைவிட இத்தொகுதியில் இலைக்கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும், ஒன்றிய ஆளும்கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும் பரஸ்பர புரிதல் உண்டாம்.

கூட்டணியில் இருந்து இலைக்கட்சி வெளியேறினாலும், இத்தொகுதியில் மட்டும் பழைய நிலையிலேயே உறவு தொடர்கிறதாம். இதை உறுதிப்படுத்துவது போல இலைக்கட்சி சார்பில் மக்களவை தேர்தலுக்கு தேர்வு செய்யப்படும் வேட்பாளர் டம்மியானவராக இருக்க வேண்டும் என தாமரை கட்சி முக்கிய நிர்வாகிகள், இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தீயாக பரவுகின்றன. ஏற்கனவே, எம்பி தேர்தலில் நிற்க இலைக்கட்சி மாஜிக்கள் பலர் யோசித்து வரும் நிலையில், டம்மியாக யாரை தேடுவது என நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.

‘தலைமைக்கு பட்டியலை அனுப்புவோம். அவங்க முடிவுதான் இறுதியானது. எங்களை கேட்காதீங்க…’ என இலைக்கட்சி நிர்வாகிகள் தரப்பு தெளிவாக கூறி விட்டதாம். எதற்கு வம்பு.. நம்மை நிற்க சொன்னால் ஏதாவது காரணத்தை சொல்லி, எஸ்கேப் ஆயிருவோம் என இங்குள்ள இலைக்கட்சி மாஜிக்கள் சிலர் முடிவெடுத்துள்ளனராம்… விலகினாலும் இப்படி பயந்துக்கிட்டே வேலை பார்த்தா எலக்சன் வௌங்கிரும்…. என இலைக்கட்சி நிர்வாகிகள் சிலர் புலம்புகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

19 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi