Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கட்டிடங்கள்: காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.12 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அரசு கட்டிடங்களை நேற்று ஒரே நாளில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவள்ளூர் அடுத்த பட்டறைப்பெரும்புதூர் அருகே சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ரூ.1 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரம் செலவில் புதிதாக கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடல் ஆகியவை அமைக்கப்பட்டன.

இந்நிலையில் புதிதாக கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடல் ஆகியவற்றை சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி விளையாட்டுத் திடல் மைதானத்தில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருடன் திறப்பு விழாவை உற்சாகமாக கொண்டாடினார்.

திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஊத்துக்கோட்டை அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வேலகாபுரம் மற்றும் 10 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.2.86 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக மாமண்டூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்ரீராம், ஹரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, தலைமை பொறியாளர் ஆறுமுகம், நிர்வாக பொறியாளர் அமலதீபன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, உதவிப்பொறியாளர் சம்பத்குமார், வடதில்லை ஊராட்சிமன்ற தலைவர் தில்லைகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேலகாபுரம் மற்றும் மாமண்டூர் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்றும் அறையை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பால்சுதாகர், வெங்கடாதிரி, குப்பன், தேன்மொழி ஏழுமலை, விஜயன், ராமாராவ், தாமு, ரஞ்சித், பிரகாஷ், யுகேந்தர் குமார், மோகனா, முனுசாமி, பழனி, ராமமூர்த்தி, சுகாகர், தசரதன் வடிவேல், ராஜேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். குடிநீர் தொட்டிகள் திறப்பு: இதேபோல் புழல் அருகே 3 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்கத் தொட்டியை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

மாதவரம் மண்டலம் 31வது வார்டு புழல் அடுத்த எம்ஜிஆர் நகர் 6வது தெருவில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.2.32 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் தொகுதி எம்எல்ஏவான எஸ்.சுதர்சனம், மாதவரம் மண்டலக்குழு தலைவர் எஸ்.நந்தகோபால் 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு, 31வது வார்டு திமுக பொறுப்பாளர் அன்பின் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வாணி பிரியதர்ஷினி, நாராயணன், சதீஷ்குமார் மற்றும் சமூக ஆர்வலர் கதிர்வேடு பாபு, திமுக நிர்வாகிகள் பொன் சதீஷ் குமார், எம்ஜிஆர் நகர் சரவணன், விஜய்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர் படம் உள்ளது.

4 புதிய கட்டிடங்கள் திறப்பு: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 7வது வார்டு கள்ளுக்கடை மேடு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 21-22ம் ஆண்டு ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடையும், தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் 22-23ம் ஆண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பசுமை உரக்குடிலும், ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் வள மீட்பு மையமும் கட்டப்பட்டது. பொன்னேரி நகராட்சி 8வது வார்டு, ராமச்சந்திரா தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 22-23ம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் நகராட்சி மன்ற கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த 4 கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கட்டிடங்களை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொன்னேரி நகராட்சி மன்ற வளாகத்தில் நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பொன்னேரி பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், தகவல் தொடர்புத்துறை பாலச்சந்தர், கவுன்சிலர்கள் நல்லசிவம், பத்மா சீனிவாசன், மோகனா காந்தாராவ், அஸ்ர முஸ்ரப் சஹில், சாமுண்டீஸ்வரி யுவராஜ், வசந்தா செங்கல்வராயன், வேதா கதிரவன், நீலகண்டன், யாக்கோப், உமாபதி, தனுஷா தமிழ்குடிமகன், பரிதா ஜெகன், கவிதா விஜய், இளங்கோ மற்றும் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

* அறிவுசார் மையம்

திருத்தணி நகராட்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதை ஊக்கப்படுத்த தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்துவைத்தார். திருத்தணியில் இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்தார்.

திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், நகரமன்றத் தலைவர் பூ.சரஸ்வதி பூபதி ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றிவைத்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, நகராட்சி ஆணையர் அருள், நகர திமுக செயலாளர் வினோத்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், ஷியாம் சுந்தர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.