சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்ட திமுகவினர், கட்சியின் பிற அணிகள் இணைந்து கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் கலைஞர் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர், தான் கலந்துகொண்ட மத்திய பிரதேச மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், கலைஞரின் போராட்ட வாழ்க்கை வரலாறு, கழக ஆட்சியின் சாதனைகள், திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் இவற்றை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சியை மாவட்ட தலைநகரங்களில் நடத்தும் பொறுப்பினை மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரிடம் தலைமைக் கழகம் வழங்கியுள்ளது. கழக இளைஞரணியிடம் மாவட்ட வாரியாக பேச்சுப் போட்டிகளை நடத்தி மாநில அளவில் 100 சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்வது, மாவட்டங்கள் தோறும் கணினி வசதியுடனான கலைஞர் படிப்பங்கள் அமைத்தல், மாரத்தான் ஓட்டப் போட்டிகளை மாவட்டங்கள்தோறும் நடத்துதல் ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாணவரணியினர் அனைத்துப் பள்ளி – கல்லூரி அளவில் கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்துதல், கலைஞர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றத்தை கல்லூரிகளில் உருவாக்குதல் ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டிட வேண்டும். விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி 38 மாவட்டங்கள் வழியாக 100 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் கலைஞர் சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடத்துதல், மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கழக சட்டத்துறையினர் சட்டக்கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தும் பொறுப்பினை ஏற்றுள்ளனர்.
ஒவ்வொரு அணியும் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை மாவட்ட ஒன்றிய நகர – பேரூர் கழக அமைப்புகள் நெறிப்படுத்திட வேண்டும். கலைஞர் புகழ் போற்றும் இந்த நிகழ்வுகளை முழுமையாக நிறைவேற்றிட வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. கலைஞர் என்பது வெறும் பெயர்ச் சொல் அல்ல. தமிழ் இனம் மொழி – நிலம் காத்து நிற்கும் வினைச்சொல். நமக்கு உரிமையுள்ள உரிச்சொல். அரசியல் எதிரிகளை அடையாளம் காட்டி ‘உரி’க்கின்ற சொல்.
எந்நாளும் நமக்கு ஊக்கத்தையும், இன எதிரிகளுக்கு அச்சத்தையும் தருகின்ற சொல். இந்தியா முழுமையும் உள்ள ஜனநாயக இயக்கங்களுக்கு உறுதுணையாக நிற்கும் சொல். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்க நினைக்கின்ற மதவாத சக்திகளை நடுங்க வைக்கும் சொல். குமரி முதல் இமயம் வரை கலைஞர் என்ற பெயரைச் சொல்லுவோம். இந்தியா முழுவதும் கலைஞரின் கொள்கைகளை எடுத்துரைத்து வெல்லுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.