இளைஞர் திறன் திருவிழா
சேலம், டிச. 2: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டிற்கான திறன் திருவிழா, வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு ஆத்தூர் பிடிஓ அலுவலகத்தில் நடக்கிறது. இதில் ஊரக பகுதிகளிலுள்ள 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, படித்த 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு 3 முதல் 6 மாதம் வரை இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்கிறார்கள்.
தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு இலவசமாக சீருடை, உணவு, தங்குமிட வசதி ஆகியவை வழங்கப்படும். வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன் கருவி இயக்குதல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், நர்ஸிங், கம்ப்யூட்டர், ஆட்டோமோட்டிவ் கேட், கைவினை பொருட்கள் தயாரித்தல், சில்லரை வர்த்தகம், சமையல்கலை, ஆயத்தாடை, சிஎன்சி ஆப்ரேட்டர், வங்கி, பிபிஓ மற்றும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது. பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர கல்வித்தகுதி சான்றுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.