ஊத்தங்கரை, ஜூலை 15: ஊத்தங்கரை காந்திநகரை சேர்ந்தவர் லோகநாதன் (25). இவரது பெற்றோர் இறந்து விட்ட நிலையில், தாத்தா மணியுடன் வசித்து வந்தார். லோகநாதன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், லோகநாதனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அழைத்துக்கொண்டு மணி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், மீண்டும் இருவரும் பேருந்தில் வீடு திரும்பினர். அப்போது பிடிஓ அலுவலகம் அருகே இறங்கி, வீட்டுக்கு நடந்து சென்றனர்.
அப்போது, லோகநாதன் தான் வீட்டுக்கு முன்னதாகவே செல்லவேண்டும் என கூறி வேகமாக சென்றுள்ளார். பின்னர், மணி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு லோகநாதன் இல்லை. இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மணி ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து, லோகநாதன் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.