திருவாரூர், டிச. 12: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் வேளாண்மை ஏற்றுமதி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையத்தில் ஏற்றுமதி வாய்ப்புள்ள வேளாண்மை விளைப்பொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் குறித்து மாவட்ட வாரியாக விவரங்கள் பரப்பு, உற்பத்தி, தரம், ஏற்றுமதி சந்தை வாய்ப்புள்ள நாடுகள், ஏற்றுமதி நடைமுறைகள் போன்றவை ஏற்றுமதியில் தொடர்புடைய நிறுவனங்களின் உதவியோடு வழங்கப்படும்.
ஏற்றுமதிக்கு ஏற்றவாறு முதன்மைப்படுத்துதல், சிப்பமிடல் போன்றவற்றை மேற்கொள்ள வழிமுறைகள், வங்கிக்கடன்பெற வழிகாட்டுதல், வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகள், சிறுவேளாண் வணிகர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்கனவே வேளாண் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு இலவசமாக வழிகாட்டுதல் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு திருவாரூர் வேளாண்மை துணை இயக்குநர் அலுவலக ஏற்றுமதி மைய ஆலோசகரை 7904020088 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பினை விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


