Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கால்வாயை தூர்வார வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை, அக். 28: அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, வனத்துறை மற்றும் நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் பேசுகையில், ‘‘கல்குறிச்சி - பந்தனேந்தல் தடுப்பணை வழியாக குண்டாறு கால்வாயில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உள்ளது.

கால்வாயின் அகலம் குறைவாக இருப்பதால் தற்போது 120 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் பந்தனேந்தல் மற்றும் திருச்சுழி கண்மாய்களுக்குப் போதிய நீர்வரத்து கிடைப்பதில்லை. எனவே, 500 கன அடி தண்ணீர் திறக்கும் வகையில் பந்தனேந்தல் கண்மாய் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் தெப்பக்குளத்தின் நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் பாதைகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், மழைநீர் தெப்பக்குளத்துக்குச் செல்வது தடைபட்டுள்ளது. எனவே, ரயில்வே பீடர் சாலை வழியாக வரும் மழைநீர் தடையின்றிச் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயைத் தூர்வார வேண்டும்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து, கோட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் மாரிமுத்து உறுதியளித்தார்.