சிவகாசி, ஜூன் 26: ரயில் பயணத்தின்போது எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ரயில்களில் பயணிக்கும் மக்கள், மிக கவனமாக பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். இதில், தாங்கள் கொண்டுவரும் உடைமைகளில் தீப்பெட்டி, பட்டாசு, சிகரெட் லைட்டர், சிறிய காஸ் சிலிண்டர் உள்பட எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எதையும் வைத்திருக்கக்கூடாது. மீறி அதனை எடுத்து வந்தால் ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தும் வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும், கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதேபோல், திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் ரயில்களில் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றித்திரிந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். ஆர்பிஎப் போலீசார் கூறுகையில், ‘ரயில்களில் கோடை கால திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து தவிர்ப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து வரக்கூடாது என்பதை அறிவுறுத்தி பயணிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தீப்பற்றும் பொருட்களை ரயிலில் எடுத்து வருவது குற்றம். அதனால், அதனை மக்கள் தவிர்க்க வேண்டும்’ என்றனர்.
