மதுரை, ஜூன் 26: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த, ராஜபாளையம் தனியார் நிதி நிறுவன பணியாளரின் உடலுறுப்பு தானத்தால், 4 பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஜமீன்நத்தம்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார்(27). தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஜூன் 22ம் தேதி காலையில் ராஜபாளையம் மில்ரோடு அருகே டூவீலரில் சென்றபோது வாகன விபத்து ஏற்பட்டு தலைக்காயம் அடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அன்றிரவு தீவிர விபத்து சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 23ம் தேதி காலை மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தலைகாயப்பிரிவு 101 ஐசியு வார்டில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். ஜூன் 24ம் தேதி இரவு 7.13 மணியளவில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்த நிலையில், அவரது தாயார் சுந்தரம்மாளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி கல்லீரல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கருவிழி ஆகியவை மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்திட வழங்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர விபத்து சிகிச்சைப்பிரிவில் செல்வகுமாரின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, டீன் அருள் சுந்தரேஸ் குமார் தலைமையில், மருத்துவ அதிகாரிகள், பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் செல்வகுமார் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்யும் பொருட்டு குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர். செல்வகுமாரின் உடலுறுப்பு தானத்தால், பாதிப்பில் இருந்த 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


