Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவகாசியில் இழுத்து மூடப்பட்ட தமிழகத்தின் 101வது உழவர் சந்தை: பொதுமக்கள் அதிர்ச்சி

சிவகாசி, மே 26: ஒரு சில கடைகளுடன் பெயரளவில் இயங்கி வந்த சிவகாசி உழவர் சந்தை திடீரென பூட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் கடந்த 1999ம் ஆண்டு விவசாயிகளின் நலன் காக்க தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. இதில் சிவகாசியில் தமிழகத்தின் 101வது உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் 54 கடைகள் உள்ளன. கழிப்பறை வசதி, இருசக்கர வாகனம் நிறுத்தும் வசதி, தகவல் மையம், சிற்றுண்டி விடுதி, இருப்பு வைக்கும் அறை, பார்க்கிங் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

தொடக்கத்தில் அருகில் உள்ள விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை அரசு பேருந்து மூலம் கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர். அதிமுக ஆட்சிக்கு வரும் போது இந்த உழவர் சந்தை மூடப்படுவது வழக்கம். கொரோனா காலத்தில் மட்டும் இந்த உழவர் சந்தை முழுமையாக இயங்கியது. தொடர்ந்து உழவர் சந்தை பெயரளவில் இயங்க தொடங்கியது. உழவர் சந்தையை மீண்டும் முழுஅளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், அண்ணா காய்கறி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் அசோகன் எம்எல்ஏ, மேயர் சங்கீதா இன்பம் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. உழவர் சந்தையை திறக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி உழவர் சந்தையை அசோகன் எம்எல்ஏ, மேயர் சங்கீதாஇன்பம் மற்றும் அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் நேரில் வந்து திறந்து வைத்தனர். ஆனால் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்காததால் உழவர் சந்தை மீண்டும் காட்சி பொருளாகவே மாறிவிட்டது. கடந்த 8 மாதமாக உழவர் சந்தையில் ஒரே ஒரு கடை மட்டும் பெயரளவில் இயங்கி வந்தது.

வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் வராத நிலையிலும் உழவர் சந்தை தினமும் திறக்கப்பட்டு காய்கறி விலை நிலவரம் தகவல் பலகையில் எழுதி வைக்கப்பட்டது. தற்போது திடீரென உழவர் சந்தையை பூட்டி உள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் முழுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உழவர் சந்தையை மீண்டும் முழுமையாக செயல்பட வைக்கும் முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ்லைன் செல்லத்துரை கூறுகையில், உழவர் சந்தை அருகே உள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் இயங்குவதால் பொதுமக்கள் அங்கு சென்றுதான் காய்கறி வாங்குகின்றனர்.

அண்ணா காய்கறி மார்க்கெட்டில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் வில்லிபுத்தூர் சாலை பகுதி காலை முதல் மாலை வரை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றது. அண்ணா காய்கறி மார்க்கெட்டில் இயங்கும் பாதி கடைகளை உழவர் சந்தைக்கு கொண்டு சென்றாலே கூட்ட நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள், வேளாண்மை அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், உழவர் சந்தை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஆலோசனை நடத்த வேண்டும். எந்த ஆட்சியில் வந்தது என்று பார்க்காமல் பொதுமக்கள் நலன் கருதி உழவர்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.