சாத்தூர், செப்.25: சாத்தூரில் உள்ள மேலகாந்தி நகரில் தனியாருக்கு சொந்தமான இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் இயந்திரங்களைக் கொண்டு தீப்பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பொறி பரவி தீ விபத்து ஏற்பட்டது.
மளமளவென பரவிய தீ, இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் தயார் செய்யப்பட்ட பொருட்கள் என அனைத்திலும் பரவியது. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனடியாக தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்புத் துறை வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீப்பெட்டி ஆலை முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டதால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


