காரியாபட்டியில் சமூகவிரோத கூடாரமாக மாறி வரும் போலீஸ் குடியிருப்பு: புதிய குடியிருப்பு கட்டி தர கோரிக்கை
காரியாபட்டி, செப். 23: காரியாபட்டியில் பாழடைந்து கிடக்கும் போலீஸ் குடியிருப்புகள் சமூகவிரோத கூடாரமாக மாறி வருகிறது. எனவே இவற்றை இடித்து அகற்றி விட்டு நவீன வசதிகளுடன் கூடிய புதிய போலீஸ் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.காரியாபட்டி காவல் நிலையம் கட்டப்பட்டு சுமார் 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் போலீசார் தங்கி பணிபுரிய கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் போலீசார் தங்கி பணியாற்றியதால் சிரமமின்றி சென்று வர முடிந்தது. பின்னர் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருந்து வந்த போலீஸ் குடியிருப்புகள் அனைத்தும் தற்போது மிகவும் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளன.
இதனால் போலீசார் அச்சமடைந்து குடியிருப்புகளை காலி செய்து வெளியில் அதிக வாடகை கொடுத்து தங்கியுள்ளனர். இதனால் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாடின்றி பாழடைந்து கிடப்பதால் தற்போது போலீஸ் குடியிருப்புகள் முழுவதும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகம் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் மது அருந்துவது, போதை வஸ்து பயன்படுத்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடப்பதாக புகார்கள் வருகின்றன.


