வத்திராயிருப்பு, செப். 18: வத்திராயிருப்பு அருகே, பேக்கரி கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர்ஒலி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடைக்கு வந்த இசக்கிபாண்டி (26), ஜூஸ் கேட்டுள்ளார். ஆனால் ஜூஸ் கொடுப்பதற்கு தாமதமானதால் கடை ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் நேற்று இரவு இசக்கிபாண்டி, மீண்டும் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடையில் வீசி எரிந்துள்ளார். இதில் கடைக்குள் தீ பற்றி எரிந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூமாபட்டி போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


