சிவகாசி, ஆக.18: அதிகாரிகளின் ஆய்வு பட்டாசு தொழிலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்று கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசினார். ஆய்வு என்ற பெயரில் கெடுபிடி செய்து பட்டாசு ஆலைகளை அதிகாரிகள் பூட்டி வருவதை கண்டித்தும், பூட்டப்பட்ட ஆலைகளை திறந்து விடக்கோரியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் யூனியன் துணைத்தலைவருமான விவேகன்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் அன்பரசு, திலிபன் மஞ்சுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தை முன்னாள் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் பட்டாசு உற்பத்தி தான். இந்த தொழிலில் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். பட்டாசு ஆலைகளில் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இது போன்ற விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும். உயிர்பலிகள் நிறுத்தப்பட வேண்டும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இதையே காரணமாக வைத்துக்கொண்டு அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். இதேபோல் பட்டாசு கடைகளிலும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது.




