காரியாபட்டி, ஆக.18: திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என, முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்எல்ஏ தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு மீண்டும் வெற்றி பெற்றார். முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று காரியாபட்டி ஒன்றியம் இலுப்பைகுளம், வேப்பங்குளம், தொட்டியன்குளம், நெடுங்குளம், முடுக்கன்குளம், கல்யாணிபுரம், கூவர்குளம், தேனூர், மறைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது ஒவ்வொரு ஊர்களிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்தந்த கிராமங்களில் நிறைவேற்ற வேண்டிய மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்த தங்கம்தென்னரசு எம்எல்ஏ, அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதோடு, இப்பகுதிகளின் வளர்ச்சிக்காக தொடர்ந்து மக்களோடு பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.



