ஏழாயிரம்பண்ணை, அக். 17: வெம்பக்கோட்டை அருகே குப்பையில் சிகரெட் வீசியவர் தீப்பிடித்து படுகாயமடைந்தார். சாத்தூர் அருகே சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைமோகன்(37). இன்டர்நெட் வயரிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வெம்பக்கோட்டை அருகே பேர்நாயக்கன்பட்டி பகுதியில் இன்டர்நெட் வயரிங் வேலை பார்த்தார். அப்போது அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு சென்று புகைப்பிடித்தார்.
புகைப்பிடித்துவிட்டு சிகரெட்டை குப்பையில் வீசினார். அப்போது அதில் இருந்த பட்டாசு மருந்து கழிவுகள் தீப்பிடித்து துரைமோகன் மீது பற்றியது. இதில் துரைமோகன் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தாயில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


