ராஜபாளையம், அக்.16: ராஜபாளையம் ஒன்றியத்தில் இரண்டாம் பருவ புதிய பாடநூல்களுக்கான இரண்டு நாள் பயிற்சி தொடக்க நிலை ஆசிரியர்கள் 265 பேர் பங்கேற்பு. ராஜபாளையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் செல்வி, முதுநிலை விரிவுரையாளர்கள் வெங்கிடசாமி, அழகப்பன், ராஜபாளையம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மாரியப்பன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினர்.
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தர்மர், கலுசுலிங்கபாக்கியம் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இப்பயிற்சி ராஜபாளையம் ஒன்றியத்தில் வட்டார வளமையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருவள்ளுவர் நகர் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. இப்பயிற்சியில் ராஜபாளையத்தை சார்ந்த 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் 265 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் இரண்டாம் பருவத்திற்கான புதிய பாடநூல்களை கற்பிக்கும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.


