Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரியாபட்டியில் ஆக்கிரமிப்பால் சுருங்கும் சாலை

காரியாபட்டி, ஜூன் 16: காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி ஒன்றியம் 36 கிராம பஞ்சாயத்துக்களையும் 2 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருப்பதால் காரியாபட்டி நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் குடியிருப்புகளும் அதிகமாக உருவாகி கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு வகையில் வளர்ந்து வரும் காரியாபட்டி நகரில் பல ஆண்டுகளாக சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு பிரச்சனை இருந்து வருகிறது.

இதனால் நகரில் போக்குவரத்துக்கு கடுமையான பாதிப்பு இருந்து வருகின்றது. காரியாபட்டி பஜார் பகுதியிலிருந்து செவல்பட்டி வரை உள்ள சாலையில் இருபுறமும் நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். காரியாபட்டி பஸ் நிலையம் அருகே யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் எம்எல்ஏ அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், உழவர் சந்தை மற்றும் வேளாண்மை அலுவலகங்கள் உள்ளன. இந்த யூனியன் அலுவலக சாலையில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தினமும் 100க்கும் மேற்பட்ட டூவீலர்களை இஷ்டப்படி நிறுத்தி சென்றுவிடுகின்றனர்.

இதுபோன்ற ஆக்கிரமிப்பு பிரச்சனைகளால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின் சாலை 5 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் டிவைடர் அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்லும் பழக்கம் தொடர்ந்து இருந்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே காரியாபட்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புக்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுநல அமைப்புகள் பலமுறை கோரிக்கைவிடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆக்கிரமிப்புகளை யார் முன்னின்று அகற்றுவது என்ற பிரச்சனை காவல்துறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினரிடையே இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் காரியாபட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உரிய முறையில் அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதிகாரிகளின் மெத்தனத்தால் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்று பணி நடைபெறாமல் உள்ளது என்று மக்கள் புகார் தெரிவித்தனர்.