அருப்புக்கோட்டை, நவ.15: அருப்புக்கோட்டை அருகே லாரி அடியில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி ஜெயராம்நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(73). இவர் ஆத்திபட்டி பஸ் ஸ்டாப் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியது. இதில் லாரி டயருக்கு அடியில் சிக்கிய சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சீனிவாசன் மருமகன் விஜயகோபால் அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரி ஓட்டுனர் செம்பட்டியை சேர்ந்த குமராண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டையில் டாரஸ் லாரிகள் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
