சிவகாசி, அக்.15: சிவகாசியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக டிரைவிங் ஸ்கூல் மேனேஜர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி முஸ்லிம் காம்ப்ளக்ஸ் மேலரத வீதியை சேர்ந்தவர் சங்கர் மனைவி கலைவாணி(36). இவர் சிவகாசியில் உள்ள தனியார் டிரைவிங் ஸ்கூல் மேனேஜர் குருநாதன் மீது மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்க சொல்லி கலைவாணியின் தந்தை காந்திராஜனை, குருநாதன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கலைவாணியின் தங்கை வீட்டுக்கு சென்ற குருநாதன் கலைவாணியை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பதிவு தபாலில் வந்த புகாரின் பேரில் குருநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மகேஸ்வரி, தேவி ஆகிய 3 பேர் மீதும் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


