மனைவி, குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
சிவகாசி, நவ.13: மனைவி, குழந்தைகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைசங்கர். இவருக்கும் சிவகாசி காரனேசன் காலனியை சேர்ந்த மாரீஸ்வரி(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கலைசங்கர் மீது மாரீஸ்வரி சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகார் நிலுவையில் உள்ளது. இதனை வாபஸ் வாங்க கலைசங்கர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அத்துமீறி மாரீஸ்வரியின் வீட்டிற்குள் நுழைந்த கலைசங்கர் அங்கு இருந்த மாரீஸ்வரி மற்றும் குழந்தைகளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பகிறது. இது குறித்து சிவகாசி நீதிமன்றத்தில் மாரீஸ்வரி புகார் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கலைசங்கர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.