பாதையை மறித்து மறியல் 142 பேர் மீது வழக்கு
விருதுநகர், நவ. 13: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாதையை மறைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை குழுவை சேர்ந்த 142 பேர் மீது சூலக்கரை போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும். அதிகளவில் ஊனமுற்றோருக்கு உதவித் தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அப்போது திடீரென பொதுமக்கள் செல்லக்கூடிய பாதையை மறைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு அனுமதி இன்றி சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூரைக்குண்டு விஏஓ கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்க மாவட்ட பொருளாளர் நடராஜன், ஆரோக்கியராஜ் உட்பட 142 பேர் மீது சூலக்கரை போலீசார் வழக்குப் பதிந்தனர்.