ஹவுரா எக்ஸ்பிரசில் கடத்திய 9 கிலோ கஞ்சா பறிமுதல்
விருதுநகர், நவ. 13: விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் தொடர்புடையோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை விருதுநகர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரயிலின் பெட்டிகளில் விருதுநகர் ரயில்வே போலீசார் அய்யாசாமி, பொன் தனசேகரன் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு பெட்டியில் கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை போலீசார் சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அந்த பைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை ராமநாதபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஒப்படைத்தனர். ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.