கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: சிஐடியு தரப்பில் வலியுறுத்தல்
விருதுநகர், செப். 8: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், டிரைவர்களுக்கு கலெக்டர் உத்தரவின்படி ஊதியம் வழங்க வேண்டுமென சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் சுகபுத்ராவிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அம்மா உணவகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ரூ.578.87 சம்பளம் வழங்க வேண்டும் என கலெக்டர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் டெங்கு கொசு ஒழிப்பு திட்டப் பணியாளர்களுக்கு, வில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.250 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், தூய்மை காவலர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.400 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, இவர்களுக்கு ரூ.578.87 சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து எங்களது சங்கத்தின் சார்பில் பலமுறை மனு அளித்தும், அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஒப்பந்த நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவர்களும் துணை செல்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் 0கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, கலெக்டர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தினக்கூலியை கடந்த 2026 ஏப்.1ம் தேதி முதல் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்புகள், தொழிலாளர்களிடம் வருங்கால வைப்பு நிதி தொகையை மாதந்தோறும் சம்பளத்தில் தவறாமல் பிடித்தம் செய்கின்றன. ஆனால், 0அவர்களது கணக்கில் முறையாக அந்த பணத்தை செலுத்துவதிவில்லை. மேலும் சட்ட விரோதமாக 60 வயதுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களிடம் தனியார் நிறுவனத்தினர் இபிஎஃப் பிடித்தம் செய்கின்றனர். எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சட்டப்படி ஊதியம் வழங்குவதோடு, முறையாக பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


