ராஜபாளையம், செப். 8: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே அய்யன் கொல்லங்கொண்டான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதியை மேம்படுத்தும் வகையில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதற்காகத் தெருக்கள் தோண்டப்பட்டன. குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டிற்கும் வந்துவிட்டன. ஆனால், இத்திட்டப் பணிக்காகத் தோண்டப்பட்ட தெருக்கள் முறையாகச் சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமான மண் சாலையாகவே காட்சியளிக்கின்றன. மேலும், தெருக்கள் தோண்டப்பட்டபோது வெளியேறிய மண் கழிவுநீர் கால்வாய்களில் நிரம்பியதால், அங்காங்கே கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரக் கேட்டை விளைவிப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது கோடை காலம் என்பதால் பாதிப்பு சற்று குறைவாக உள்ளது. இருப்பினும், வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது இத்தேருக்கள் சேறும் சகதியுமாக மாறி, பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, சேதமடைந்த தெருக்கள் அனைத்தையும் புதிய சிமெண்ட் சாலைகளாக மாற்றித் தர
வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


