ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும்
விருதுநகர், ஆக.8: மண் பரிசோதனை மேற்கொள்ளும் முறை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மண் மாதிரி மண் ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால்தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும் போது ஒவ்வொரு முறை பயிர் செய்வதற்கு முன்பும் மண் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும் அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில்தான் மண் மாதிரி எடுக்க வேண்டும்.
ஒரு நிலத்தின் மண் வெவ்வேறாக இருந்தால் தனித் தனியாக மாதிரி எடுக்க வேண்டும். எரு குவித்த இடம், வரப்பு வாய்க்கால் அருகில் மற்றும் மர நிழலில் மாதிரி எடுக்கக் கூடாது. ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியே மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கப்படும் இடத்திலுள்ள இலை, சருகு, புல் ஆகியவைகளை மேல் மண்ணை செதுக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மண் மாதிரியுடன் விவசாயி பெயர் மற்றும் அஞ்சல் முகவரி, கிராமத்தின் பெயர், நிலத்தின் பெயர், இறவை அல்லது மானாவாரி, பயிரிடப்பட்ட முன் பயிர் அடுத்து பயிரிடப் போகும் பயிர் பிரச்சனை இருப்பின் அதன் விபரங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.