சிவகாசி, செப்.7: சிவகாசி அருகே பூலா ஊரணியை சேர்ந்தவர் கடற்கரை மகன் குருசாமி (44). இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து பேசுவதாக பிரகாஷ் என்பவர் பேசியுள்ளார், டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி குருசாமியிடம் ரூ.4 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் ராகவ்சவுத்ரி என்பவர் குருசாமியை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் கொடுத்தால் ஏற்கனவே கொடுத்த பணத்துடன் அதிக லாபத்தொகை தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய குருசாமி மேலும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் 2 பேரும் குருசாமியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் குருசாமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோன்று சிவகாசி அருகே ஆனையூர் முனீஸ் நகரை சேர்ந்த மாலினி(35) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட, வாலிபர் ஒருவர் கூறியது போல் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து அனுப்பி உள்ளார். இந்த மோசடி குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் என்பவரை மும்பையைச் சேர்ந்த ராஜகோபால்குண்டு தொடர்பு கொண்டார்.
குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக கூறி பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்து 547ஐ வங்கி கணக்கு மூலம் செலுத்தியுள்ளார். பின்னர் ஏமாற்றப்பட்டதால், ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் சிவகாசி அருகே சாட்சியாபுரம் ஸ்டேட் பேங்க் காலனி சேர்ந்தவர் அலி அகமது (49). இவரை மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.95 ஆயிரம் மோசடி செய்துள்ளார். புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


