அருப்புக்கோட்டை, செப்.7: அருப்புக்கோட்டை நகர் பகுதியில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால், போலீசார் தான் விசாரணை செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்கின்றனர். இதற்காக நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே பணியில் உள்ளார். அவருக்கு கீழ் பணியாற்ற எஸ்ஐ மற்றும் போலீசார் இல்லை. நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கும் போது மட்டும் தேவைக்கு ஏற்ப கூடுதலாக குற்றப்பிரிவு பணியிலும் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் சரியாக ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றப்பிரிவில் போலீசார் இல்லாத காரணத்தினால் செல்போன் திருட்டு, பேருந்துகளில் பணம் திருட்டு, என காவல் நிலையம் சென்றால் வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அருப்புக்கோட்டை நகர்காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் நிலையம் என்பது பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு குற்ற பிரிவில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களை நியமித்து திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை கண்டறிந்து பொதுமக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


