சிவகாசி, ஆக. 7: விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. இங்கு சுமார் 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதுடன் இந்திய அளவில் வர்த்தகத்திலும் சிவகாசி பட்டாசு தொழில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பட்டாசு ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் வெடி விபத்துக்களால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்கிறது.
அந்த வகையில், கடந்த மாதம் 26ம் தேதி சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்ட விரோதமாக குடோன் அமைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதையடுத்து, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு மற்றும் பதுக்கலை தடுக்க காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்பேரில், கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மாவட்டம் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



